
நீலாய், பிப்ரவரி-28-டிசம்பரில் நெகிரி செம்பிலான், நீலாயில் குண்டு வெடிப்பை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 63 வயது முதியவர், நேற்றிரவு மரணமடைந்தார்.
Yeoh Hock Sun, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இரவு 8.18 மணியளவில் உயிரிழந்ததை, நீலாய் போலீஸ் தலைவர் Johari Yahya உறுதிப்படுத்தினார்.
உயர்நிலை சிகிச்சை வழங்கப்பட்டும் உடல் ஒத்துழைக்காததே மரணத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.
சொந்தமாகத் தயாரித்த வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்ததாக, ஜனவரி 9-ஆம் தேதி Yeoh மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும் அவற்றை அவர் மறுத்து விசாரணைக் கோரியிருந்தார்.
முன்னதாக டிசம்பர் 22-ஆம் தேதி நீலாய் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நிகழ்ந்த வெடிப்பு தொடர்பில் விசாரணையில் இறங்கிய போலீஸ், அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து 3 வெடிப்பொருட்களைப் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், டிசம்பர் 27-ஆம் தேதி உடலில் தீக்காயங்களுடன் Yeoh கைதுச் செய்யப்பட்டு, முழு போலீஸ் கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.



