
நீலாய், டிசம்பர் 18 – நேற்று, நீலாய் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், குடியேற்றச் சட்டம் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 46 சட்டவிரோத குடியேறிகள் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
காலை 9 மணிக்கு தொடங்கி, சுமார் நான்கு மணி நேரம் நீடித்த அந்த நடவடிக்கையில், 18 முதல் 43 வயதிற்கிடையிலான வங்காளதேச ஆண்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிரம்பான் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் Kennith Tan Ai Kiang தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில்தான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. செல்லுபடியாகும் அனுமதி பாஸ்கள் மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமை, அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவையை மீறி தங்கியிருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைகளுக்காக லெங்கெங் குடியேற்றத் தடுப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



