
வெர்ஜினியா, ஜூலை-12 – அமெரிக்காவில் 100 அடி உயரத்திற்கு இராட்சத சுனாமி பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளனர்.
அப்பேரலைகள் கடற்கரையின் 8 அடி உயரத்தை அழித்து விட்டுச் செல்லும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன், ஒரிகோன் மாநிலங்களையும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவையும் உள்ளடக்கியதே காஸ்கேடியா (Cascadia) துணைப்பிரிவு மண்டலமாகும்.
அங்கு 9 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, இந்த ‘அழிவு நாள்’ சுனாமி உருவாகும்.
இதில் அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கியப் பகுதிகள் நீருக்கடியில் மூழ்கிவிடும்.
கரையோரப்பகுதிகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு இருக்குமிடம் தெரியாமல் உருக்குலைந்துபோகும்.
இப்பேரழிவு நிகழ்வு 2100 ஆம் ஆண்டுக்குள் நிகழும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகும்.
என்றாலும் அடுத்த 50 ஆண்டுகளில் எந்த நேரத்திலும் அது தாக்குவதற்கு 37 விழுக்காடு வாய்ப்புகள் இருப்பதையும் விஞ்ஞானிகள் மறுக்கவில்லை.
காஸ்கேடியா 300 ஆண்டுகளுக்கு முன்பு அதன் கடைசி பெரிய பூகம்பத்தைக் கண்டது.
எனவே அடுத்தது எந்த நேரத்திலும் வரலாம்.
அப்படி அடுத்து ஏற்படும் பெரிய பூகம்பத்தில் 5,800 பேர் கொல்லப்படுவர், 100,000 பேர் காயமடைவர்.
சுமார் 618,000 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகும்.
இராட்சத சுனாமிப் பேரலைகளால் மேலும் 8,000 பேர் உயிரிழப்பர்.
ஆயிரக்கணக்கான பள்ளிகளும் சுகாதார பராமரிப்பு சேவை மையங்களும் சின்னாபின்னமாகும் அல்லது சுனாமியில் அடித்துச் செல்லப்படும்.
இதனால் 134 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்பை இது ஏற்படுத்துமென, தேசியப் பேரிடர் அவசர மேலாண்மை நிறுவனம் கணித்துள்ளது.
விஞ்ஞானிகளின் இக்கூற்று அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளபடியே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.