
ஷா ஆலாம், மார்ச்-1 – பிப்ரவரி 20 வரைக்குமான நிலவரப்படி, சிலாங்கூரின் சில மாவட்டங்களில் 5 தொழுநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஜனவரியில் உலு லங்காட் மற்றும் செப்பாங்கில் 2 சம்பவங்கள் பதிவான வேளை, கடந்த மாதம் கோம்பாக், உலு சிலாங்கூர், குவாலா லங்காட் ஆகிய மாவட்டங்களில் 3 சம்பவங்கள் பதிவாகின.
பாதிக்கப்பட்ட அந்த ஐவரில் ஒரு பூர்வக்குடி உட்பட மூவர் உள்நாட்டவர் என மாநில சுகாதார இயக்குநர் Dr உம்மி கல்சோம் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும், அவர்கள் வீட்டில் சிகிச்சையைத் தொடருவர்; என்றாலும் தனிமைப்படுத்தல் தேவையில்லை.
சிறார்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை.
நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது; குஷ்ட நோய் என்றும் அழைக்கப்படும் இந்நோய்க்கு சிகிச்சையளிக்க முடியுமென்பதால் பொது மக்களும் கவலையடைய வேண்டாம் என Dr உம்மி கேட்டுக் கொண்டார்.
தொழுநோய்க்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வதெப்படி என்பது குறித்து, மருத்துவப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இதற்கு முன் நெகிரி செம்பிலானில் 9 தொழுநோய் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன.
அவற்றில், பிப்ரவரி 19-ஆம் தேதி 18 வயது பூர்வக்குடி பெண் சிகிச்சைப் பலனளிக்காது உயிரிழந்தார்; மற்ற 8 பேரும் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.