நெகிரி செம்பிலான், ஜனவரி 20 – புதிய கல்வி ஆண்டை முன்னிட்டு, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியில் இலவசமாக புத்தகப் பை வழங்கும் உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 1,000 புத்தகப் பைகள் இலவசமாக வழங்கப்படவிருப்பதாக பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களுக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் பள்ளி தவணை தொடங்கவிருப்பதால், இந்த புத்தகப் பைகள் பிப்ரவரி முதல் வாரத்திலேயே மாணவர்களிடம் விநியோக்கப்படவிருக்கிறது.
இந்த உதவி பெற்றோரின் பொருளாதார சுமையைக் குறைப்பதுடன், மாணவர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கும் என ஸ்ரீ சஞ்சீவன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கான பதிவும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், உதவியை பெற விரும்பும் மாணவர்கள் தங்களின் பதிவுகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.