
கோலாலம்பூர், மார்ச்-3 – குடிநுழைவுக்கான QR Code முறையை ஜோகூரில் இவ்வாண்டு BSI எனப்படும் சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்திலும், KSAB எனப்படும் சுல்தான் அபு பாக்கார் வளாகத்திலும் கார்களுக்கு விரிவுப்படுத்த அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது.
ஜோகூர் – சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் பேருந்துப் பயணிகளுக்கும், மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் அமுல்படுத்தப்பட்ட அம்முறை வெற்றியளித்துள்ளது.
எனவே, அடுத்ததாகக் கார்களுக்கும் இந்த QR Code முறையை அமுலுக்குக் கொண்டு வருவதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் கூறினார்.
QR Code முறையிலான குடிநுழைவுப் பரிசோதனைக்கு 3 வினாடிகளே தேவைப்படுகின்றன; எனவே, கார்களுக்கும் அதனை அமுல்படுத்தினால், மக்களுக்கான சேவையளிப்பை மேலும் ஆக்கப்பூர்வமானதாக்கலாம் என அவர் சொன்னார்.
ஜோகூர் பாலத்தில் நெரிசல் பிரச்னையைக் கையாளும் சிறப்பு செயற்குழுவின் கூட்டத்திற்கு இன்று தலைமையேற்றப் பிறகு துணைப் பிரதமர் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில் அதே கூட்டத்திற்குப் பிறகு பேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், கடந்தாண்டு அறிமுகமான இந்த QR Code முறை நல்ல பலனைத் தந்திருப்பதாகக் கூறினார்.
இதற்கு முன்பு, ஒரு குடிநுழைவு பரிசோதனையைப் பாதையை 15 நிமிடங்களுக்கு 90 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே கடக்க முடியும்; ஆனால் QR Code உதவியுடன் தற்போது அதே 15 நிமிடங்களுக்கு150 மோட்டார் சைக்கிள்களால் அப்பாதையைக் கடந்துசெல்ல முடிவதாக அவர் சொன்னார்.