நைஜீரியாவில் பெட்ரோல் டாங்கி லாரி வெடிப்பு; சாலையில் சிந்திய எரிபொருளை எடுக்கத் திரண்ட 70 பேர் பலி

லாகோஸ், ஜனவரி-19, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் டாங்கி லாரி வெடித்துச் சிதறியதில், 70 பேர் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் 60,000 லிட்டர் பெட்ரோலை ஏற்றியிருந்த அந்த டிரக் லாரி, விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.
சாலையில் சிந்திய பெட்ரோலை எடுப்பதற்காக ஏராளமானோர் கூடிய போது திடீரென லாரி வெடித்துச் சிதறியதால், அந்த 70 பேரும் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகி மாண்டதாக நைஜீரிய சாலைப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
மேலும் பலர் கடுமையான தீப்புண் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நைஜீரியாவில் 18 மாதங்களில் பெட்ரோல் விலை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் விபத்துகளின் போது சாலைகளில் சிந்தும் பெட்ரோலை, பலர் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேகரிக்க இறங்கி விடுவது அந்நாட்டில் வாடிக்கையாகியுள்ளது.
அக்டோபரில் நிகழ்ந்த இதே போன்ற சம்பவத்தில் 170-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.