
பேங்கோக், மே-3 – சீனாவில் கல்லறையொன்றில் நிகழ்ந்த கோர விபத்து என ஆரம்பத்தில் நம்பப்பட்ட ஒரு சம்பவம், பெரியப்பாவே தன் தம்பி மகள்கள் மூவரை படுகொலை செய்யப் போட்ட சதித்திட்டமென்ற அதிர்ச்சி தகவல் அம்பமாகியுள்ளது.
Hebei மாகாணத்தைச் சேர்ந்த 3 சகோதரிகளும் ஜனவரியில் தந்தையின் கல்லறைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு, சீன முறைப்படி காகிதங்களை எரித்து வழிபாடு நடத்தினர்.
ஆனால், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருள் அக்கல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது அவர்களுக்குத் தெரியாது.
காகிதங்களிலிருந்து நெருப்பு வெளியாகி குண்டு வெடித்ததில், முறையே 37, 33, 26 வயதிலான 3 சகோதரிகளும் உடல் சிதறி மாண்டனர்.
இடுகாட்டில் எப்படி குண்டு வெடித்தது என்ற பெரும் சந்தேகத்தில் விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சித் தகவல்கள் காத்திருந்தன.
அந்த வெடிப்பொருளை கல்லறையில் ஒளித்து வைத்தது வேறு யாருமல்ல; கொல்லப்பட்ட சகோதரிகளின் சொந்த பெரியப்பா என திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
பல ஆண்டுகளாக தம்பி குடும்பத்தின் மீது கொண்ட தீராத பகையால் அவர் அக்கோடூரத்திற்கு துணிந்துள்ளார்.
சுமார் 6 மாதங்களாக சிறுகச் சிறுக பட்டாசுகளைச் சேகரித்து, அவற்றை பெரும் வெடிப்பொருளாக மாற்றி, கடந்தாண்டு டிசம்பர் 20-ஆம் தேதி தம்பியின் கல்லறையில் ஒளித்து வைத்ததை, அவர் போலீஸிடம் ஒப்புக் கொண்டார்.
நீதிமன்ற விசாரணையின் முடிவில் அந்தக் கொலைக்கார பெரியப்பாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.