
கோலாலம்பூர், மார்ச் 27 – நோன்பு மாதத்தில் கடந்த வாரம் நோன்பு இருக்காத முஸ்லீம்களுக்கு உணவுப் பொருட்களை
விற்பனை செய்த பெண் ஒருவருக்கு திரெங்கானு செத்தியுவில் (Setiu) உள்ள ஷரியா நீதிமன்றம் 5 நாள் சிறைத் தண்டனை மற்றும் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது .
இந்த குற்றச்சாட்டை திங்கட்கிழமையன்று 38 வயதுடைய அந்த பெண் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ஷரியா நீதிபதி மாட் ரோப்பி பூசு ( Mat Ropi Busu) இந்த தண்டனையை விதித்ததாக திரெங்கானு ஷரியா அமலாக்க தலைமை அதிகாரி அய்ஸி சைடி அப்துல் அஸிஸ் ( Aizi Saidi Abdul Aziz ) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண் அபராதத்தை செலுத்தியதோடு , மார்ச் 28 வரை கிளந்தனில் உள்ள Pengkalan Chepa பெண்கள் தடுப்பு முகாமில் தண்டனையை அனுபவித்து வருவார் என Aizi கூறினார்.
2001 ஆம் ஆண்டின் திரெங்கானு ஷரியா குற்றவியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 19 ( a ) யின் கீழ் அந்தப் பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மார்ச் 18 ஆம் தேதியன்று மதியம் மணி 12.15 அளவில் Setiuவில் உள்ள ஒரு வீட்டில் திரெங்கானு இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் அமலாக்க சோதனையின் போது அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
நோன்பு கடைப்பிடிப்பதை தவிர்த்த நபர்களுக்கு உணவு மற்றும் பானங்களை விற்றதற்காக அப்பெண் தடுத்து வைக்கப்பட்டார்.