
மஞ்சோங், ஜூலை 11- பேராக், மஞ்சோங், பந்தாய் ரெமிஸ்-சில் அமைந்திருக்கும் ஹண்ட்லி தோட்ட ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் 56-ஆம் ஆண்டு தீமிதி மகோற்சவம் கடந்த சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடந்தேறியது.
தொழிலதிபர் அமரர் VK கல்யாணசுந்தரம் அவர்களின் நிறுவனத்துக்குச் சொந்தமான இத்தோட்டத்து மஹா மாரியம்மன் ஆலயம் இவ்வட்டார மக்களிடையே பிரபல ஆலயமாக திகழ்கிறது. 1906-ல் ஒரு புற்றிலிருந்து தோன்றியதாக அறியப்படும் அம்மன் இன்று இரம்மியமான சூழலில் விசாலமான நிலப்பரப்பில் அழகிய கோயிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அவ்வகையில் இவ்வாண்டு திருவிழாவின் தீமிதி மகோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காலையில் பால் குடம் ஏந்தினர். 200க்கும் மேற்பட்டோர் மாலையில் தீமிதியை வலம் வந்தும், தீக்குழியில் இறங்கியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தோட்டங்களிலிருந்து இந்திய குடும்பங்கள் பெருமளவில் வெளியேறிவிட்டாலும் பக்தி, பாரம்பரியம், உறவு, நட்பு ஆகியவற்றை மலரும் நினைவுகளாக ஓர் இடத்தில் மீண்டும் பறைசாற்றிடும் அடையாளமாக இந்த ஹண்ட்லி தோட்டத்து திருவிழா அமைந்திருந்தது.
காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களை உருவாக்க அக்காலத்தில் நமது முன்னோர்கள் மலாயா கொண்டுவரப்பட்ட போது அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு அம்மனை நம்பி வாழ்ந்த தோட்டங்களில் ஆலயம் எழுப்பினர். அதனால்தான் பல தோட்டங்களில் இன்று வரை அம்மன் ஆலயங்கள் அதிகளவில் இருப்பதையும் ஆடி மாதத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதையும் நாம் காண்கிறோம்.
அவ்வகையில் நமது சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஓர் முக்கிய அம்சமாகவும் திகழும் இந்த திருவிழாக்கள் வரும் காலங்களிலும் தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.