ஜோகூர் பாரு, ஜனவரி-2, WhatsApp வாயிலாக பங்கு முதலீட்டு மோசடிக்கு ஆளாகி 176,000 ரிங்கிட்டை பறிகொடுத்து நிற்கிறார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த ஓர் இல்லத்தரசி.
கடந்த நவம்பர் 6-ம் தேதி facebook-கில் பங்கு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து அவர் கவரப்பட்டுள்ளார்.
இதையடுத்து WhatsApp வாயிலாக தொடர்பில் வந்த நபர், ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் வங்கிக் கணக்கு உள்ளிட்ட சுயவிவரங்களைப் பதிவிடுமாறு அம்மாதுவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலீட்டைப் பொருத்து ஒரு நாளைக்கு 12-லிருந்து 100 விழுக்காடு வரை இலாபம் கிடைக்குமென அவர் நம்ப வைக்கப்பட்டார்.
இதையடுத்து 11 தடவையாக மொத்தம் 176,000 ரிங்கிட்டை, கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அவர் மாற்றியுள்ளார்.
இலாபத் தொகையை மீட்க முயன்ற போது முடியாமல் போகவே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.
Semak Mule CCID இணையத்தளத்தில் பரிசோதித்ததில், சந்தேக நபர் கொடுத்த வங்கிக் கணக்கு மீது முதலீட்டு மோசடி தொடர்பில் ஏற்கனவே 5 போலீஸ் புகார்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் கூறியது.