
கோலாலம்பூர், ஜனவரி 21 – நேற்று காலை Jalan Liku, Jalan Bangsar அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் உட்புகுந்து திருட முயன்ற 41 வயதுடைய ஆடவரை, அவ்விடத்திலேயே போலீசார் கைது செய்தனர்.
கடையின் உரிமையாளர் போலீசை தொடர்புகொண்ட சில நிமிடங்களிலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தேகநபரை கைது செய்தனர் என்று பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Hoo Chan Hook தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில், கடையின் கேட் திறக்கும் ரிமோட் ஒன்று காணாமல் போயிருந்தது. மேலும், கடையின் பக்கவாட்டு கதவில் உடைத்து நுழைந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. சந்தேகநபரின் உடல் சோதனையில், பாராங்க் கத்தி, சரிசெய்யக்கூடிய ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் மற்றும் வாகன சாவி–ரிமோட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட ஆடவரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றத்தில் உத்தரவு கோரப்படவுள்ளது. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் மற்றும் ஆபத்தான ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.



