
பஞ்சிங், ஆகஸ்ட் 28 – பஞ்சிங் பகுதியிலுள்ள விநாயகர் கோயிலில், 101வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த கோயிலின் விநாயகர் சிலை மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்டு ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாளும் விதவிதமான அர்ச்சனைகள், பழ அர்ச்சனை, வில்வ அர்ச்சனை, திருவிழக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் வருகை புரிந்த பக்தர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.
நேற்று காலை கணபதி ஹோமத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள முனீஸ்வரர் கோவிலிலிருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு, குவாலா ரெமான் தோட்டம் தமிழ்ப்பள்ளி வழியாக ஊர்வலமாக பக்த மெய்யன்பர்கள் நடந்த வந்த காட்சி மிக சிறப்பாக இருந்தது.
இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கும் அன்னை மகனாம் விநாயக பெருமானின் திருவருள் கிடைத்ததென்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து பால் அபிஷேகம், கும்ப தீர்த்த அபிஷேகம், ராஜ அலங்காரத்தைத் தொடர்ந்து மதிய வேளை மகேஸ்வர பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதே நாள் இரவில் சர்வ அலங்காரத்துடன் பிள்ளையார் ரத ஊர்வலத்தில் கம்பீரமாக பகுதியை வளம் வந்த காட்சி அனைவரையுமே சிலிர்க்க செய்தது.
இந்த கோயில், கோலா ரெமான் தோட்டம் மற்றும் பஞ்சிங் பகுதியில் வாழ்ந்த இந்திய சமூகத்தினரால் நிறுவப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த ஆலய விநாயகர் சிலை அருகிலுள்ள முனீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டு, பின்னர் 1980 ஆம் ஆண்டு கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் விநாயக மூர்த்தி இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கம்பீரமாக வீற்றிருக்க தொடங்கினார்.
அப்பகுதி முன்பு ரப்பர் தோட்டமாக இருந்த நிலையில், பின்னர் அது கெளபா சாவித் எஸ்டேட்டாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருவிழா வெற்றிகரமாக நடைபெற உதவியாயிருந்த அனைத்து பக்தர்கள், காவல்துறை அன்பர்கள் மற்றும் ரேலா படையினரின் ஒத்துழைப்புக்கு கோயில் நிர்வாகம் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டது.