
வாஷிங்டன், அக்டோபர் -4,
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி தனது இணையதளப் புதுப்பிப்புகளை (updates) நிறுத்தியுள்ளது.
“நாசா தற்போது மூடப்பட்டுள்ளது” என்ற செய்தி இணையத்தளத்தில் காணப்படுகிறது.
இந்த மூடல், 3I/Atlas எனும் நட்சத்திர இடைவெளிக் கோள் செவ்வாயை கடந்து செல்லும் தருணத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன் சிறப்பு படங்களை நாசா வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அதன் இணையத்தளம் மூடப்பட்டது, விண்வெளி ஆர்வலர்களை பெருத்த ஏமாற்றமடையச் செய்துள்ளது.
நாசாவின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நிர்வாகம், முன்னதாக
24.8 பில்லியன் டாலரிலிருந்து 18.8 பில்லியன் டாலராகக் குறைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அறிவியல் திட்டங்கள் 33 விழுக்காடும் பிற திட்டங்கள் 47 விழுக்காடும் குறைக்கப்படவுள்ளன.
சுமார் 32% பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதற்கு அறிவியலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாசா திட்டங்கள் சிக்கலைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
சிலர், இந்த நிதிக் குறைப்புகள் பாதுகாப்பை பாதிக்கக்கூடும்… குறிப்பாக விண்வெளி வீரர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி பயணங்களின் எதிர்காலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நிச்சயமற்றதாக உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.



