கோலாலம்பூர், ஜனவரி 3 – இவ்வருடம் பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி, பத்துமலை திருத்தலத்தில் தைப்பூச திருவிழாவிற்கு மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
இவ்விழாவின்போது இவ்வருடம், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு வாழை இலையிலான அன்னதானம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த அன்னதானத்திற்கு எந்தவித பணமும் பக்தர்களிடம் வசூலிக்கப்படாது என்று கூறினார் டான் ஶ்ரீ; ஆனால் விருப்பமுள்ளவர்கள் சமையலுக்குரிய பொருட்களை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே 2025ஆம் ஆண்டின் தைப்பூசத்திற்கு வருகை புரியும் பக்தர்களுக்குப் பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, முன்தினம் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற பன்னீர் அபிஷேக விழாவிற்கு பின் ஊடகவியாளர்களிடம் பேசிய டான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.