
பந்திங், ஜனவரி 15 – சிலாங்கூர் பந்திங், Kampung Olak Lempit தொழிற்பேட்டை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் தீக்கிரையாகின.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே, பல பகுதிகளில் இருந்து 69 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, தீ அதிகாலை 1 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ அணைப்பு பணிகள் முடிந்த பின்னர் மேற்கொண்ட தேடுதல் பணியின் போது, மூன்று கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் முழுமையாக எரிந்து நாசமானதுடன், மற்ற இரண்டு தொழிற்சாலைகளில் குறைந்த அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்றும் அடங்கும்.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



