
ஷா ஆலம், ஜனவரி 13 – சிலாங்கூரில் பன்றிப் பண்ணைத் தொழிலை நவீனமயமாக்குவதற்காக மாநில அரசு எந்தவிதமான மாநில நிதியையோ அல்லது மாநில நிலத்தையோ ஒதுக்கவில்லை என்று Selangor Menteri Besar டத்தோ ஸ்ரீ Amirudin Shari தெரிவித்துள்ளார்.
நேற்று, சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah, மாநிலம் இனி பன்றிப் பண்ணைத் தொழிலுக்கு நிதி ஒதுக்கவோ முதலீடு செய்யவோ மாட்டாது என்று கூறியிருந்தார். மேலும், முஸ்லிம் அல்லாத மக்களின் தேவைக்காக எவ்வளவு பன்றி இறைச்சி தேவைப்படுகிறது என்பதை அறிய விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
அமிருதின் கூறுகையில், துர்நாற்றம் மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தியதாக கூறப்படும் குவாலா லாங்காட் பாரம்பரிய பன்றிப் பண்ணைகளை மூடுவது தற்போது மாநில அரசின் முக்கிய முன்னுரிமை என்கின்றார். எதிர்காலத்தில் இந்தத் துறை முழுமையாக தனியார் துறையால் நடத்தப்படும் எனவும் நவீன முறைகளுக்கு மாற்றப்படும் என்றும், அனைத்து பண்ணைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போது மாநிலத்தில் உள்ள பன்றிகளின் எண்ணிக்கை உள்ளூர் தேவையின் சுமார் 30 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்கிறது என்றும், உற்பத்தியை அதிகரிக்கவோ அல்லது ஏற்றுமதி நோக்கில் செல்லவோ அரசுக்கு திட்டமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



