
பறவைகள் கடத்தல் மையம் கண்டுபிடிப்பு: 180 Murai Batu பறவைகள் பறிமுதல்
ஜோகூர், பிப்ரவரி 9
ஜோகூர் குளுவாங் பகுதியில் உள்ள வீட்டை மையமாகக் கொண்டு, Murai Batu பறவைகளை இந்தோனேசியாவிற்கு கடத்த முயன்ற சட்டவிரோத நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN அதிகாரிகள், அதிகாலையில் மேற்கொண்ட சோதனையில், தலா மூன்று பறவைகள் கொண்ட 60 கூண்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மொத்தம் 180 Murai Batu பறவைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 1 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் சுமார் 50 வயதுடைய ஒரு உள்ளூர் ஆண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பறவைகளுக்கான சட்டபூர்வ உரிமை ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவை என PERHILITAN தெரிவித்துள்ளது.
சந்தேகநபர், வனவிலங்குகளை சட்டவிரோதமாக சேமித்து கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறார். பின்னர் அவர் 30,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் மேல் விசாரணைக்காக PERHILITAN அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.



