
கோலாலம்பூர் – 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள், அவற்றை அகற்றி, புதிய, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் வகையில், அரசு RM10 மில்லியன் இணை மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், 2026 பட்ஜெட்டின் கீழ் செயல்படுத்தப்படுவதுடன், நாடு முழுவதும் சுமார் 5,000 வாகன உரிமையாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
தகுதி பெறும் ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் அதிகபட்சம் RM2,000 வரை அரசு மானியம் வழங்கப்படும். அதே அளவு தொகையை உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதால், புதிய வாகனம் வாங்கும் செலவு குறிப்பிடத்தக்க அளவில் குறையும். இந்தத் திட்டத்தில் புரோட்டான் மற்றும் பெரோடுவா நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பழைய வாகனங்கள் பாதுகாப்பு குறைவானவை, அதிக எரிபொருள் செலவழிப்பவை மற்றும் அடிக்கடி பழுதடையும் என்பதால், அவற்றை சாலையிலிருந்து அகற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
வாகன உரிமையாளர்கள் பங்கேற்கும் விற்பனை நிலையங்கள் (showroom) மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் பழைய வாகனங்கள் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் முறையாக அகற்றப்படும்.
இந்த முயற்சி சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வாகனத் துறையை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.



