
பாங்காக், ஜூலை 5 – தாய்லாந்தின் லாப்லே மாவட்டத்திலுள்ள ஒரு பாழடைந்த வீட்டிலிருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்ட 8 வயது சிறுவன் கடந்த எட்டு வருடங்களாக போதைப்பொருள் கூடாரத்தில் இருந்த 6 நாய்களால் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றான் என்ற தகவல் பேரதிர்ச்சியை தந்துள்ளது.
தார்சன் (Tarzan) பட பாணியில் இருக்கும் இச்சிறுவனின் நிலை வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அச்சிறுவன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்குச் போகவில்லை என்பதோடு நாய்களோடு வளர்க்கப்பட்டதால் அவனுக்கு பேச தெரியாது மாறாக குரைக்க மட்டுமே தெரியும் என்றும் உள்ளூர் அறக்கட்டளை தலைவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் சகோதரர்கள் இருவருமே போதைக்கு அடிமையானவர்கள் என்றும் இதுநாள் வரை அரசாங்கம் வழங்கி வரும் மானியத்தை அவ்விருவரும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, மீட்கப்பட்ட அச்சிறுவன் சிறந்த கல்வி, நல்வாழ்க்கை மற்றும் பாதுகாப்பான சூழலில் வளர்வதற்கு அறக்கட்டளை தகுந்த இடத்தை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.