
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 24 – உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள் இருந்தது மற்றும் துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து நான்கு வர்த்தக இடங்களை மூடும்படி பினாங்கு மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட தூய்மை பேனும் நடவடிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆகஸ்டு 4 ஆம் தேதிவரை மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு மளிகைக் கடை ஆகியவற்றை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பினாங்கு மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.
கிழக்குக்கரை மாவட்ட பகுதியிலுள்ள உணவுகள் விற்பனை செய்யும் 5 கடைகளில் அதிரடி சோதனையை பினாங்கு மாநகர் மன்ற லைசென்ஸ்துறை மேற்கொண்டது. உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் மற்றொரு கடைக்கு குற்றப்பதிவு அல்லது Kompaun விநியோகிக்கப்பட்டதாக தனது முகநூல் பதிவில் பினாங்கு மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.
உணவு தயாரிக்கும் பகுதி, சமையல் கூடம் மற்றும் உணவுக்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் இடம் எப்போதும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த பினாங்கு மாநகர் மன்றம் எப்போதும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.