ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர் -11 – பினாங்கு, ஜியோர்ஜ்டவுனில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவ நிபுணர்கள், நேற்று ஒரு வழக்கறிஞருக்கு செலவுத் தொகையாக 78,000 ரிங்கிட்டை உடனடியாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.
அவர்களுக்கு எதிராக பறிமுதல் மற்றும் விற்பனை ஆணையைச் செயல்படுத்த நீதிமன்ற அதிகாரிகள் அதிரடியாக வந்திறங்கியதே அதற்குக் காரணம்.
S. பால் ராஜ் என்ற வழக்கறிஞருக்கு நீதிமன்ற ஆணைப்படி 82,764 ரிங்கிட் செலவுத் தொகையைச் செலுத்தத் தவறியதால், பொருட்களை சீல் வைப்பதற்கு நீதிமன்றம் ஆட்களை அனுப்பியது.
2014-ல் தமக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்பட்டதாக தவறாக முடிவுச் செய்து, இடப்பக்க சிறுநீரகத்தை உடனடியாக அகற்ற வேண்டுமென வற்புறுத்தியதாகக் கூறி, 3 மருத்துவமனைகள் மற்றும் 8 மருத்துவர்களிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரிங்கிட் இழப்பீடு கேட்டு பால் ராஜ் வழக்குத் தொடுத்திருந்தார்.
தனக்குப் புற்றுநோய் இல்லையென்பது பின்னர் உறுதிச் செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்தவர், மருத்துவர்கள் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி அவ்வழக்கைத் தொடுத்தார்.
எனினும், அவ்வழக்கு மிகவும் தாமதமாக தொடுக்கப்பட்டிருப்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டுமென, ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
கூட்டரசு நீதிமன்றம் வரை சென்ற அம்மூவரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதால், அந்த செலவுத் தொகையைச் செலுத்த அவர்கள் உத்தரவிடப்பட்டிருந்தனர்.
எனினும், கடைசி பேச்சுவார்த்தைதில் 82,764 ரிங்கிட்டை 78,000 ரிங்கிட்டாகக் குறைத்துக் கொள்ள பால் ராஜ் வழக்கறிஞர்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து, முழுப் பணமும் கொடுக்கப்பட்டு, சீல் வைக்கும் ஆணை இரத்துச் செய்யப்பட்டது.