
ஜோர்ஜ்டவுன், ஜூலை-22- பினாங்கில் வர்த்தகம் செய்ய வெளிமாநில வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக் கட்டுப்பாடுகளை, அவர்கள் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
உள்ளூர் வியாபாரிகளும் செழிக்க வேண்டும் என்பதை வெளியார் புரிந்துகொள்ள வேண்டுமென, பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பினாங்கு மாநிலத்தைச் சேராத வியாபாரிகள், அனுமதிக்கப்பட்ட மாதங்களுக்கு வெளியே இந்தியக் கலாச்சார பொருட்களை விற்பதைக் கட்டுப்படுத்தும் விதிமுறையை, மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் (Chow Kon Yeow) தற்காத்து பேசிய நிலையில், அதற்கு ஆதரவாக தினகரன் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பினாங்கு வியாபாரிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஏராளமான புகார்களைத் தொடந்து, மாநில ம.இ.கா ஏற்கனவே இவ்விவகாரத்தை எழுப்பியுள்ளது.
பினாங்குத் தீவிலும் பெருநிலத்திலும் விற்பனைக் கூடங்களை அமைக்கப்படுவது அண்மையக் காலமாகவே கண்கூடு.
இந்த வாய்ப்புகளை வெளிமாநில வியாபாரிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்; இதனால் பாதிக்கப்படுவதோ உள்ளூர் வியாபாரிகளே.
எனவே தான் பல்வேறு தரப்புகளுடன் பேசி இந்த காலக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால் அது கூட, வெளிமாநில வியாபாரிகளை முற்றாகத் தடைச் செய்யவில்லை; மாறாக, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலும், பின்னர் தீபாவளிக்கு 30 நாட்கள் முன்னரும் வியாபாரம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவே செய்வதை தினகரன் சுட்டிக் காட்டினார்.
இது win-win situation என்பது போல வியாபாரிகளுக்கும் பயனர்களுக்கும் சாதகமானச் சூழலே. இந்தியச் சமூகம் ஒருவர் மீது ஒருவர் பழிபோடாமல், இன்னொருவரின் வளர்ச்சிக்கும் கை கொடுக்க வேண்டும் என தினகரன் அறிக்கை வாயிலாக வலியுறுத்தினார்.