
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-23,
பினாங்கு, சுங்கை நிபோங்கில் நடைபெறும் பினாங்கு விழா தளத்தில், சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையால், வியாபாரிகள் கலவரமடைந்தனர்.
அதிகாரிகளை எதிர்பார்க்காத அவர்கள், பதற்றத்தில் apron மேலங்கி துணியையும், காலணியையும் தேடினர்.
தீமோர் லாவோட் மாவட்ட சுகாதார அதிகாரிகள் விசாரித்த போது, அது போன்ற விதிமுறைகள் இருப்பது தங்களுக்குத் தெரியாது என சில வியாபாரிகள் கூறியதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி எம். ஷஷிகுமரன் தெரிவித்தார்.
இன்னும் சிலர், உணவுகளைக் கையாள்வதற்கான சான்றிதழை வைத்திருக்கவில்லை; antitifoid தடுப்பூசியைப் போடவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
உணவங்காடிகளின் சுத்தம் அதிருப்தியளிக்கும் வகையில் இருந்ததோடு, குண்டும் குழியுமாக இருக்கும் தரையில் மழை நீர் தேங்கி துர்நாற்றமும் வீசியது.
3 மணி நேர சோதனையில், 43 உணவங்காடிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றில் 30 கடைகளுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
13 உணவங்காடிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டைப் பூர்த்திச் செய்திருந்தன.
பினாங்கு விழா தளத்தில் முதன் முறையாக அத்தகையச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.