பின்புற பார்வை கேமராவில் கோளாறு; 239,000 வாகனங்களை மீட்டுக் கொள்ளும் தெஸ்லா
வாஷிங்டன், ஜனவரி-11, Rear-view camera எனப்படும் பின்புற பார்வை கேமராவில் ஏற்பட்ட கோளாறுக் காரணமாக, 239,000 வாகனங்களைச் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்வதாக, இலோன் மாஸ்கின் தெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
2024-2025 ஆண்டுகளுக்கான Model 3 மற்றும் Model S இரக வாகனங்களும், 2023-2025 ஆண்டுகளுக்கான Model X மற்றும் Model Y இரக வாகனங்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளன.
எனினும், இணையம் வாயிலான மென்பொருள் புதுப்பிப்பின் மூலம் கோளாறை சரிசெய்திட முடியுமென, அந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்தது.
அமெரிக்காவில் 2.6 மில்லியன் தெஸ்லா வாகனங்கள் மீது, அந்நாட்டின் நெடுஞ்சாலை போக்குவரத்து பதுகாப்புத் தரப்பு விசாரணை அறிக்கைத் திறந்த சில நாட்களில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயனர்கள் தொலைவிலிருந்தே தெஸ்லா வாகனங்களை இயக்கும் வசதியால் ஏராளமான சாலை விபத்துகள் நிகழ்வதாக புகார் எழுந்ததையடுத்து அவ்விசாரணைத் தொடங்கியது.
கோளாறடைந்த அல்லது செயலிழந்து போன கணினிப் பலகைகளை எந்தவொரு செலவுமில்லாமல் மாற்றித் தருவோம் என தெஸ்லா அறிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்க வரலாற்றிலேயே ஆக அதிகமாக 5.1 மில்லியன் வாகனங்கள் மீட்டுக் கொண்ட தெஸ்லா, மென்பொருள் புதுப்பிப்பின் மூலம் அவற்றை சரி செய்திருப்பதால், இப்புதியப் பிரச்னையையும் விவேகமாகக் கையாளுமென எதிர்பார்க்கப்படுகிறது.