கோலாலம்பூர், டிசம்பர் 22 – பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 90 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 3,170,000 ரிங்கிட் நிதி இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி மானியத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாக ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை இந்து ஆலயங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் துறையின் நேரடி மானியத்தை வழங்கிய பிரதமருக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே, ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, பாஹாங் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்து ஆலயப் பிரதிநிதிகள் தங்களுக்கான மானிய கடிதத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிதி ஆலயங்களின் நிர்வாகத்திற்கும் மேம்பாட்டிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என ஆலயப் பிரதிநிதிகள் இவ்வாறு வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.