
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – சர்ச்சைக்குரிய SOSMA சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சந்திப்பதாகக் கூறப்படும் ‘அவலங்கள்’ தொடர்பில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் ‘கொடுமையை’ அனுபவித்தவர் என்ற வகையில், இந்த SOSMA கைதிகளின் ‘இன்னல்களை’ டத்தோ ஸ்ரீ அன்வாரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியுமென, மலேசியத் தமிழர் குரல் அறவாரியத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.
உள்துறை அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ இனியும் நம்பிப் பயனில்லை; தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை பிரதமர் மட்டுமே;
எனவே அவர் உடனடியாகத் தலையிட்டு இவ்விவகாரத்திற்கு ஒரு நல்ல தீர்வுக் காண வேண்டுமென டேவிட் கூறினார்.
SOSMA கைதிகளுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது குறித்து வெளியில் தெரிவதில்லை; சிலர் தாக்கப்படும் போதோ, உயிரிழக்கும் போதோ செய்திகள் வருவதோடு சரி; இது அவர்களின் குடும்பத்தாருக்கு நியாயமான ஒன்றல்ல என டேவிட் சொன்னார்.
சுங்கை பூலோ சிறைச்சாலை, தைப்பிங் சிறைச்சாலை, போக்கோக் செனா சிறைச்சாலை போன்ற இடங்களில் பதிவான அத்தகையச் சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார்.
பயங்கரவாதிகளுக்கு மட்டுமே SOSMA சட்டம் பயன்படுத்தப்பட வேண்டுமென பிரதமரே கூறியிருக்கிறார்.
எனவே, SOSMA கைதிகளை அதிலிருந்து விடுவித்து, நடப்பிலுள்ள குற்றவியல் சட்டத்தின் கீழ் நிதிமன்றங்களில் குற்றம் சாட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக டேவிட் மார்ஷல் கூறினார்.
துன் Dr மகாதீர் முஹமட்டின் முந்தைய பக்காத்தான் ஆட்சியின் போது, 400 கைதிகள் விடுவிக்கப்பட்டதையும் டேவிட் சுட்டிக் காட்டினார்.
மகஜர் சமர்ப்பிப்பதற்காக, SOSMA கைதிகளின் குடும்பத்தாருடன் நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே நேற்று கூடிய போது அவர் அவ்வாறு சொன்னார்.