
கோலாலம்பூர், மார்ச்-17 – பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகள் அல்லது 2 தவணைகளாகக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, பெர்சே அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அம்மசோதா மிக எளிதாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று விடுமென, அந்த தேர்தல் சீர்திருத்த அமைப்பின் தலைவர் ஃபைசால் அப்துல் அசிஸ் கூறினார்.
சிறந்த எதிர்காலத்திற்கு எதிர்கட்சியினரும் நிச்சயமாக அம்மசோதாவை ஆதரிப்பர் என அவர் நம்பிக்தைத் தெரிவித்தார்.
இவ்வேளையில் பிரதமர் பதவியைப் போல, மாநில மந்திரி பெசார் மற்றும் முதல் அமைச்சர் பதவிக் காலமும் 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; தற்போதைக்கு பினாங்கு மட்டுமே அத்தகைய வரையறையை கொண்டுள்ளதாக ஃபைசால் சொன்னார்.
முன்னதாக DAP ஆண்டு பொதுப் பேரவையில் பேசிய போது, பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் பரிந்துரையில் தமக்கும் உடன்பாடே என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
எனினும், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற கட்சிகளுடன் அது குறித்து முதலில் கலந்துபேச வேண்டுமென்றார் அவர்.
DAP பொதுப்பேரவையில் உரையாற்றிய அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அப்பரிந்துரையை முன்வைத்தார்.
பிரதமர் பதவிக் காலத்தை 2 தவணைகளாகக் கட்டுப்படுத்துவது பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதி என்பதை சுட்டிக் காட்டிய அவர், அடுத்த 24 மாதங்களில் அந்த சீர்திருத்தங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.