
கோலாலாம்பூர், அக்டோபர்-2 – பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டில் இந்தியா தீபாவளி விற்பனை தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு, உரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என வியாபாரிகள் சிலர் கூறுகின்றனர்.
கோலாலாம்பூர் மாநகர மன்ற மேயரின் அதிகாரி, கூட்டரசு பிரதேச அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa-பின் உதவியாளர் சிவமலர் உள்ளிட்டோர் இன்று அங்கு வருகைப் புரிந்து நிலைமைகளைக் கண்டறிந்தனர்.
முதலில் ஒதுக்கிய இடத்தில் தான் தங்களுக்கு வியாபரத் தளம் கொடுக்கப்பட வேண்டுமென்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக, அதன் போது அவ்விரு அதிகாரிகளிடமும் வியாபாரிகள் முறையிட்டனர்.
என்றாலும், Lorong Chan Ah Tong பகுதிக்கு கூடாரங்களை மாற்றும் முடிவிலேயே இருப்பதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக, போலின் என்பவர் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
வியாபாரம் நடத்த தாங்கள் எதிர்பார்ப்பது ஒரு பாதுகாப்பான மற்றும் முறையாக இடம் மட்டுமே என்றார் அவர்.
தொடக்கத்தில் 44 கடைகளுக்கு குலுக்கல் நடத்தப்பட்டு வியாபாரத் தளங்களையும் ஒதுக்கி விட்டு, கடைசியில் அதனை வேறு இடத்திற்கு மாற்றியது பெருத்த ஏமாற்றமளிப்பதாக ஸ்டெல்லா கெங்காதரன் குறிப்பிட்டார்.
இப்பிரச்னையால் வியாபாரத்தை தொடங்க முடியாமல் 6 நாட்கள் வீணாகி விட்டதாகவும், இதற்கான நஷ்ட ஈடு எங்கே? என்றும் கேத்ரின் என்பவர் கேட்டார்.
இது குறித்து வந்திருந்த அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “பேசி விட்டு சொல்கிறோம்” என்று மட்டுமே பதில் வந்ததாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், நேற்று காலை வீசியக் காற்றில் கூடாரங்கள் பறந்து போனது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டதில், இன்னும் 2 நாட்களில் மாற்று கூடாரங்கள் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாக, Dr திலா தெரிவித்தார்.
பெருநாள் காலத்தில் கூடுதல் வருமானமீட்டும் இதுபோன்ற சிறு வியாபாரிகளின் வாய்ப்புகளுக்கு எந்த பங்கமும் வராத வகையில் அதிகாரிகள் ஒரு நல்ல தீர்வைக் கொண்டு வருவார்கள் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.