
கோலாலம்பூர், அக்டோபர் 3 – பிரிக்க்ஃபீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் கடந்த புதன்கிழமையன்று கனமழை மற்றும் பலத்த காற்றால் இடிந்து சேதமடைந்த கூடாரங்களை மாற்றும் வகையில் மொத்தம் 118 புதிய கூடாரங்கள் நேற்று நிறுவப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலீஹா முஸ்தபா தெரிவித்தார்.
முந்தைய கூடார கடைகளைக் காட்டிலும் தற்போது 10க்கு 10 என்ற பரப்பளவில் பெரிய மற்றும் உறுதியான கூடாரங்கள் மாற்றி அமைத்து தரப்பட்டுள்ளன.
முன்னதாக, பஜாரில் உள்ள சிறு வியாபாரிகள், ஏற்கனவே அமைக்கப்பட்ட கூடாரங்கள் மிகச் சிறிய அளவிலும் மற்றும் தரமற்றதாகவும் உள்ளன என்றும், அவற்றை பெரிய அளவிலும், உறுதியான கூடாரங்களாகவும் மாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ம.இ.கா வின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனும் கருத்து வெளியிட்டு, அந்த கூடாரங்கள் வலுவற்றவையும் அதிக வாகன நெரிசல் காணப்படும் முக்கிய சாலையில் அமைப்பதற்கு பொருத்தமற்றவையும் எனக் குறிப்பிட்டிருந்தார்.



