கோலாலம்பூர், அக்டோபர் 7 – 66 வயதான முன்னாள் குழந்தை பராமரிப்பாளர், கடந்த மாதம் சளி மருந்தைப் பாலில் கலந்து 18 மாதக் குழந்தைக்குக் கொடுத்த குற்றச்சாட்டை இன்று எதிர்நோக்கினார்.
Cantonese மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்ற காரணத்தால் அவ்வாறு பாலில் மருந்து கலந்து கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
வழக்கின் படி, குழந்தையின் தந்தை கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி, பிறந்த குழந்தையைக் கவனித்துக் கொள்ள 20 நாட்களுக்கு 4,500 ரிங்கிட்டிற்கு அவரை பணியமர்த்தியுள்ளார்.
இதனிடையே, தனது மகன் பெரும்பாலும் தூங்குவதையும், அவனது உடல்நிலை மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் இருப்பதையும் கவனித்து, அவருக்குச் சந்தேகம் ஏற்பட, வீட்டின் சிசிடிவியின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் அந்த குழந்தை பராமரிப்பாளருக்கு 8,000 ரிங்கிட் அபராதம்; செலுத்த தவறினால் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதேவேளையில் 1,000 ரிங்கிட் உத்தரவாதத்துடன், 90 மணிநேரம் சமூக சேவை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.