
கோலாலாம்பூர், ஜனவரி-12-இன்று தொடங்கிய 2026 புதிய கல்வியாண்டில் நாடளாவிய நிலையில் 10,280 முதலாமாண்டு மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் கல்வியைத் தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக மாணவர் எண்ணிக்கை சரிந்துள்ளதை இது காட்டுகிறது.
2023-ஆம் ஆண்டில் 11,712 மாணவர்களாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2024-ல் 11,568-டாகக் குறைந்து கடந்தாண்டு 11,120-தாக பதிவாகியது.
ஆக, இந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை 11,000-க்கும் கீழ் முதலாமாண்டு மாணவர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.
மாநிலம் வாரியாகப் பார்த்தால், 3,161 முதலாமாண்டு மாணவர்களுடன் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது.
1840 மாணவர்களுடன் ஜோகூர் இரண்டாமிடத்திலும், 1497 மாணவர்களுடன் பேராக் மூன்றாமிடத்திலும் உள்ளன.
நெகிரி செம்பிலானில் 1070 பேரும், கெடாவில் 880 பேரும், கோலாலாம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் 460 பேரும், மலாக்காவில் 323 பேரும், பஹாஙில் 296 பேரும் முதலாமாண்டிலி பதிந்துகொண்டுள்ளனர்.
கிளந்தான், பெர்லிஸ் மாநிலங்களில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
‘தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு’ என பல்வேறு தரப்பினர் பிரச்சார இயக்கங்களை மேற்கொண்டும், பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்களை ஊக்குவித்தும், முதலாமாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியே போனால், முதலாமாண்டில் அடுத்தாண்டு பத்தாயிரம் மாணவர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்ற அச்சம் நம்மை ஆட்கொண்டுள்ளது.
எது எப்படி இருப்பினும், பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்களுக்கு நமது வாழ்த்துகள்.



