சன்வேய் டாமான்சாரா, ஜனவரி-13 – ஹலால் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சன்விட்ச் ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவின அமைச்சு சோதனை நடத்தியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா, சன்வேய் டாமான்சாராவில் உள்ள அத்தொழிற்சாலையில் இன்று மதியம் 1 மணிக்கு, புத்ராஜெயா KPDN மற்றும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM இணைந்து சோதனை மேற்கொண்டன.
சிலாங்கூர், கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் பல கடைகளில் விற்கப்படும் சன்விட்ச் ரொட்டிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் ஹலால் முத்திரைகள் காணப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில், அத்தொழிற்சாலையிடம் JAKIM அங்கீகரித்த ஹலால் முத்திரை இல்லையென்பது கண்டறியப்பட்டது;
மாறாக, செயல்பாட்டை நிறுத்தி விட்ட வேறொரு நிறுவனத்தின் ஹலால் முத்திரையை அத்தொழிற்சாலை பயன்படுத்தி வந்துள்ளது.
அதாவது, அந்நிறுவனத்தை அதன் உரிமையாளர், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தொழிற்சாலைக்கு விற்று விட்டார்;
வர்த்தகம் கைமாறியதும், அதன் ஹலால் முத்திரையும் தங்களுக்கே சொந்தம் எனக் கருதி அத்தொழிற்சாலை பயன்படுத்தியுள்ளது.
அதுவும், 2023 அக்டோபர் 15-ஆம் தேதியே காலாவதியான ஹலால் சான்றிதழ் என KPDN அமுலாக்க தலைமை இயக்குநர் Datuk Azman Adam தெரிவித்தார்.
இதையடுத்து, 2011 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.