
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – பெட்டாலிங் ஸ்டிரீட் பெயர்ப் பலகையில் இருக்கும் சீன மொழி எழுத்துகளைக் அகற்றத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL மறுத்துள்ளது.
சீன எழுத்துகளை மாற்றவோ அகற்றவோ இதுவரை எந்தவொரு திட்டமும் இல்லை.
நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வழிகாட்டிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றியுள்ளதால் அதனை மாற்றும் பேச்சுக்கு இடமில்லை.
வெளியில் பரவும் தகவல்களை பொது மக்கள் நம்ப வேண்டாம்; எதுவாக இருந்தாலும் தங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு DBKL அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டது.
1982-ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேச விளம்பர துணைச் சட்டங்களின் அடிப்படையிலேயே, பெயர்ப் பலகைகள் தொடர்பான ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படுகிறது.
பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உள்ளூர் சமூகத்தின் தேவைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஆழமான பரிசீலனைக்கு அவை உட்படுத்தப்படுகின்றன.
எது எப்படி இருப்பினும், அனைத்து இனங்களின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தை DBKL தொடர்ந்து மதித்து வருமென்றும் தெரிவிக்கப்பட்டது.
பெட்டாலிங் ஸ்டிரீட் பெயர்ப் பலகையில் உள்ள சீன எழுத்தை அகற்றுவதற்கு DBKL திட்டமிட்டிருப்பதாக, கோலாலம்பூர் அங்காடி மற்றும் சிறு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் Ang Say Tee முன்னதாக கூறியிருந்தார்.
அது குறித்து கருத்துரைத்திருந்த ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங், அப்படியொரு திட்டமிருந்தால் அதனை தான் ஆட்சேபிப்பதாக சொன்னார்.
நடப்பு விதிமுறைகளைப் பின்பற்றியிருப்பதால் சீன எழுத்து ஒரு சர்ச்சையாகக் கூடாது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.