
கோலாலம்பூர், ஜனவரி-3 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஸ் ஏற்கத் தயாராக இருப்பதாக அதன் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தான் ஸ்ரீ முஹிடின் யாசின் விலகிய நிலையில், பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக அவர் கூறினார்.
தனது உடல்நிலை சரியில்லாததால், வேறு திறமையான தலைவர்கள் பட்டியலில் உள்ளனர் என்றும் ஹாடி ஒப்புக்கொண்டார்.
முதலில் பாஸ் கட்சி அளவிலும் பின்னர் பெரிக்காத்தான் அளவிலும் இது குறித்து விவாதிக்கப்படும்; அநேகமாக அடுத்த வாரம் அக்கூட்டம் நடைபெறும் என, மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி சொன்னார்.
பெரிக்காத்தான் தலைமைப் பொறுப்புக்கு, பாஸ் கட்சியில் உள்ள பல்வேறு தரப்புகள் பலரது பெயர்களை முன்மொழிந்து வருகின்றன.
பாஸ் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், திரங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ Dr அஹ்மாட் சம்சூரி மொக்தார், மற்றும் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனூசி நோர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
இதனிடையே, தலைவர் பொறுப்புக்கு தாம் பரிந்துரைக்கப்படுவதை சனூசி நிராகரித்துள்ளார்.
தமக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும், தம்மை விட தகுதிவாய்ந்தவர்கள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
குறிப்பாக சம்சூரி தான் சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஏற்கனவே, பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரராக பலராலும் அடையாளம் காட்டப்பட்டவர் தான் இந்த அஹ்மாட் சம்சூரி என்து குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ, தற்போது, பெரிக்காத்தான் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதில் பாஸ் கட்சியின் கையே மேலோங்கியுள்ளது…



