கோலாலம்பூர், ஜனவரி-12, வரும் செவ்வாய்க்கிழமைப் பிறக்கும் தை மாதமும் தைப்பொங்கலும் இந்தியர்களுக்கும் நாட்டுக்கும் மேலும் வளப்பத்தையும் நன்மையையும் கொண்டு வரட்டும்.
KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு கூறியுள்ளார்.
தைப்பொங்கலை ஒட்டி, தனது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் ‘மகிழ்ச்சிப் பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
PKR கட்சியின்
தகவல் பிரிவுத் துணைத் தலைவருமான அவர், அந்நிகழ்வில் சுங்கை பூலோ வட்டாரத்தைச் சேர்ந்த 4,000 -க்கும் மேற்பட்ட B40 இந்தியக் குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களையும் கரும்புகளையும் அன்பளிப்பாக வழங்கினார்.
இது கடந்த ஈராண்டுகளாக நடைபெற்று வருவதாகும்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற உவமைக்கொப்ப இந்த உழவர் திருநாள் மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு புதியத் தொடக்கமாக அமையட்டும் என்றார் அவர்.
இவ்வேளையில் தித்திக்கும் பொங்கல் நாளை மேலும் சிறப்பிக்கும் வகையில், இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றொரு மகிழ்ச்சி செய்தியை துணையமைச்சர் அறிவிக்கவுள்ளார்.
அது என்ன திட்டம் என்பதை அறிந்துகொள்ள செவ்வாய்க்கிழமை வரை காத்திருங்கள் என, இந்தியர் விவகாரங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
கடந்தாண்டில் இந்தியச் சமூகத்துக்காக KUSKOP-பின் கீழ் 7 அம்சத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
வணக்கம் மடானி தொடங்கி, SPUMI இந்தியத் தொழில் முனைவர் மேம்பாட்டுத் திட்டம், பெண் தொழில்முனைவர்களுக்கு அமானா இக்தியார் கீழ் PENN திட்டம், BRIEF-i தொழில்முனைவோர் கடனுதவித் திட்டம் என அப்பட்டியல் நீளுகிறது.
இத்திட்டங்கள் வாயிலாக ஏராளமான இந்தியர்கள் பயனடைந்துள்ளனர்.