
ஜோகூர் பாரு, ஜன 23 -மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக சமூக சேவை ஆற்றும்படி தண்டனை பெற்ற முதல் நபராக இந்தோனேசிய பெண் ஒருவர் விளங்குகிறார்.
49 வயதான அனிதா லுக்மான், திடக்கழிவுகளை – குறிப்பாக சிகரெட் துண்டு மற்றும் பிளாஸ்டிக் போத்தலை குப்பைத் தொட்டியில் போடுவதற்குப் பதிலாக பொதுத் தெருவில் அப்புறப்படுத்திய குற்றத்தை இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
ஜனவரி 1ஆம்தேதி, jalan Ibrahim Sultan, Stulang Laut ட்டில் அதிகாலை மணி 12.41 அளவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
அப்பெண்ணுக்கு நீதிபதி நோர் அசியாட்டி (Nor Aziati ) 500 ரிங்கிட் அபராதம் விதித்து ஆறு மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். இந்த சேவை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர ஷிப்டுகளில் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
அபராதம் செலுத்தத் தவறினால் அனிதாவுக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமொன நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் சமூக சேவை உத்தரவை நிறைவேற்றத் தவறினால் RM2,000 முதல் RM10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.



