
தோக்யோ, மே-20 – 7-Eleven நிறுவனம் முதன் முறையாக தோக்யோ புறநகர்ப் பகுதியில் பொருட்களை அனுப்பும் தானியங்கி ரோபோக்களை சோதனைச் செய்யத் தொடங்கியுள்ளது.
இது ‘வயதான’ நாடாக வேகமாக மாறி வரும் ஜப்பானில் 7-Eleven அதன் சேவை நம்பகத்தன்மையை உறுதிச் செய்வதற்கான முயற்சியாகும்.
ஜப்பானில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், பொது வீதிகளில் ‘டெலிவரி ரோபோக்களை’ அனுமதிக்க 2023-ஆம் ஆண்டில் போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டன.
Panasonic உள்ளிட்ட பிற நிறுவனங்களும் பொருட்களை கொண்டு செல்ல ஏற்கனவே இது போன்ற புதிய இயந்திரங்களை சோதித்துள்ளன.
இந்நிலையில் 7-Eleven நிறுவனத்தின் இந்த முன்னோடித் திட்டம், முன்னணி வாகன உற்பத்தியாளர் Suzuki மற்றும் தோக்யோவைத் தளமாகக் கொண்ட Lomby ஆகியவை இணைந்து உருவாக்கிய சக்கர, வண்டி வடிவ ரோபோவை உள்ளடக்கியது.
இது மேற்கு தோக்யோவில் சுமார் 10,000 வீடுகளுக்கான சேவையில் ஈடுபடும்.
பல்பொருள் விற்பனை ஜாம்பவான் நிறுவனமான 7-Eleven, மனிதர்களால் தொலைதூரத்தில் கையாளக்கூடிய இதேபோன்ற ரோபோக்களை ஏற்கனவே சோதனை செய்துள்ளது.
ஆனால் பொது நடைபாதைகளில் சுய-ஓட்டுநர் இயந்திரங்களின் முதல் சோதனை இதுவாகும்.
விவேகக் கைப்பேசி செயலியில் செய்யப்படும் ஆர்டர்கள் ரோபோவை முடுக்கி விடுகின்றன; இதையடுத்து குறிப்பிட்ட வீட்டு முகவரியை நோக்கி மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஆளில்லா இயந்திரம் பொருட்களை அனுப்புகிறது.
பொது சாலைகளில் போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் பிற அடையாளங்களைக் கூட இந்த ரோபோக்களால் அடையாளம் காண முடியும்.
இருப்பினும் ஆபத்து அவசரநிலை ஏற்பட்டால் தலையிடக்கூடிய மனித ஆபரேட்டர்களால் அவை தொலைதூரத்தில் கண்காணிக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு, மக்களால் சூழப்பட்டு ரோபோக்கள் திக்குத் தெரியாமல் விழிக்கும் பட்சத்தில், ஒலிப்பெருக்கி வாயிலாக ஆப்பரேட்டர்கள் கூட்டத்தாரிடம் பேசி, ரோபோக்களுக்கு வழிவிடுமாறு கேட்கின்றனர்.
இந்த சோதனை பிப்ரவரி வரை நடைபெறும் என்றும், இந்த இயந்திரங்கள் மனித ஓட்டுநர்களை நம்பியிருக்கும் 7-Eleven-னின் தற்போதைய விநியோக சேவையைத் தக்கவைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.