
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – மலேசியாவில் ஆயுள்காலம் உயர்வதும், வரித்தளம் குறைவதும் ஓய்வூதிய முறையை பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது.
தற்போது, முக்கிய ஓய்வூதிய வழிமுறையாக இருப்பது EPF எனும் ஊழியர் சேமநிதி.
இதுவொரு வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டமாகும்.
அதாவது, தனிநபர் மற்றும் முதலாளிகளின் சந்தா பங்களிப்புகள், முதலீட்டு வருமானங்கள் ஆகியவற்றை ஊழியர்களின் சேமநிதியாகக் சேமிக்கும் முறையாகும்.
இதில் கடைசி சம்பளம் மற்றும் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு மாத மாதம் பணம் வழங்குவதை உறுதிச் செய்யும் defined benefit எனப்படும் பழைய வகை வரையறுக்கப்பட்ட அனுகூல ஓய்வூதியம், அரசுப் பணியாளர்களுக்கு இன்னும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 145 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
அதன் விளைவாக, 55 வயதுக்குட்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இப்போது 10,000 ரிங்கிட்டுக்கும் குறைவான சேமிப்புகளே உள்ளன.
மலேசியர்கள் இப்போது 70, 80 வயதுகளுக்கு மேல் வாழ்கின்றனர்.
எனவே ஓய்வுக்குப் பிறகு, போதிய சேமிப்பில்லாமல் வாழ்க்கையைச் சமாளிப்பது சிரமமாகி வருகிறது.
அதே நேரத்தில், பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது; இதனால் வரி செலுத்துநர்களின் எண்ணிக்கையும் குறைகிறது.
இந்நிலையில் தற்போதைய ஓய்வூதிய முறை நீடித்து நிலைக்கும் ஒன்றாக இல்லை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆக, EPF சேமிப்புடன், வாழ்நாள் முழுவதும் மாதாந்திர முறையில் பணத்தை மீட்கும் முறையை இணைக்கும் hybrid முறை ஒரு நல்ல மாற்றாக இருக்கலாம்.
சிங்கப்பூரின் CPF Life திட்டமே இதற்கு ஒரு வெற்றிகரமான எடுத்துக்காட்டு.
மக்களிடையே நிதியறிவை பெருக்கி, சுய சந்தா சேமிப்பை ஊக்குவித்து, முதியோருக்கான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதில் மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்.
எதிர்காலத்தில் நிதிசார்ந்த சிக்கலில் விழாமல் இருக்க இது அவசியமாகும்.