போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக நடித்து 300 ரிங்கிட் லஞ்சம் கேட்ட ஆடவன் கைது

ஈப்போ, நவ 3 – சனிக்கிழமை அதிகாலை, பெர்ச்சாமில், தாமான் ஈப்போ தீமோர் பாருவில் உள்ள ஒரு உணவகத்தின் முன், போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் 300 ரிங்கிட் ரொக்கம் கேட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவன் கைது செய்யப்பட்டான். போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக உடையணிந்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தடுத்த வீடியோ முகநூலில் பொதுமக்களால் பகிரப்பட்டபோது, இந்த சம்பவம் வைரலானதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமட் ( Abang Zainal Abidin Abang Ahmad ) தெரிவித்தார்.
விசாரணையில், 20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரை தடுத்து வைத்து, வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டதாகவும், அதற்கு முன்பு 300 ரிங்கிட் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர் பின்னர் தனது நண்பரைத் தொடர்பு கொண்டு உதவி கோரியதை தொடர்ந்து இந்த விவகாரம் போலீசிற்கு தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர் போலீஸ் அதிகாரிபோல் ஆள் மாறாட்டம் செய்வதற்காக பல பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக அபாங் ஜைனால் அபிடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். Bike Rescue
என்று எழுதப்பட்டிருந்த மேலங்கி, போலீஸ் சின்னத்தைக் கொண்ட தொப்பி மற்றும் காலணிகளுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவத்தின்போது இரண்டு யமஹா மோட்டார் சைக்கிள்கள் , Walkie Talkie தொடர்பு சாதனம் மற்றும் போலீஸ் சின்னத்தைக் கொண்ட பல்வேறு வில்லைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.



