பாரீஸ், அக்டோபர்-17 – துணைக்கோள வணிகத்தில் மாதக்கணக்கில் பெரும் நஷ்டத்தில் மூழ்கியிருந்த ஐரோப்பிய வான் போக்குவரத்து ஜாம்பவான் நிறுவனமான ஏர்பஸ் (Airbus), அதன் தற்காப்பு மற்றும் விண்வெளித் துறையில் 2,500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவுச் செய்துள்ளது.
வருவாய் அடிப்படையில் ஏர்பஸ் நிறுவனத்தின் இரண்டாவது மிகப் பெரியப் பிரிவான அந்த தற்காப்பு – விண்வெளித் துறையில், 7 விழுக்காட்டு ஊழியர்களை அந்த வேலைநீக்கம் உட்படுத்தியுள்ளது.
தொழிற்சங்கத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2026 வாக்கில் அதனை அமுல்படுத்துவதே ஏர்பஸின் திட்டமாகும்.
வான் போக்குவரத்துச் சந்தையில் சவால்கள் மேலும் கடினமாகி வருவதால், வேலை நீக்கம் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதாக, அதன் தலைமை செயலதிகாரி கூறினார்.
போட்டித்தன்மையுடன் நீடித்து நிலைப்பெற அது அவசியமே என்றார் அவர்.
எனினும், நிறுவனத்தை உடனடியாக மறுசீரமைக்கும் திட்டமெதுவும் அதனிடத்தில் இல்லை.
துணைக்கோளங்களையும் போக்குவரத்து முறைகளையும் நிர்மாணித்து வரும் ஏர்பஸ் நிறுவனம், ஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் திட்டம், போர் விமானக் கட்டுமானம் மற்றும் விண்வெளி ஏவுதள திட்டம் போன்றவற்றில் பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.