
வத்திகன் சிட்டி, ஏப்ரல்-12-உலக நாடுகள் உடனடியாக மோதல்களை நிறுத்தி, அமைதிக்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டுமென, போப்பாண்டவர் லியோ கேட்டுக் கொண்டுள்ளார்.
“சுயத் தம்பட்டமும் பணத்தை முன்னிறுத்தியதும் போதும்; அதிகாரத்தை வெளிப்படுத்தியதும் போதும்! போரும் போதும்” என வத்திகன் சிட்டியில் நடைபெற்ற அமைதிக்கான பிரார்த்தனை நிகழ்வில் உரையாற்றிய போது அவர் சற்று சீற்றத்துடன் வலியுறுத்தினார்
உண்மையான வலிமை என்பது உயிர்களுக்கு சேவை செய்வதே என்றார் அவர்.
“அதிகாரமும் பணமும் முன்னிலைப்படுத்தும் அரசியல் அணுகுமுறைகள் உலகை மேலும் பிரிவினைக்கு தள்ளுகின்றன. இதை மாற்ற, மனிதாபிமானம் மற்றும் கருணையை மையமாகக் கொண்ட முடிவுகள் தேவை” என உலக அமைதிக்கான வலுவான அழைப்பை போப்பாண்டவர் விடுத்துள்ளார்.
போர்களால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் துயரங்களை நினைவுகூர்ந்து, உலகத் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கருமான இந்த போப்பாண்டவரின் உரை, உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளதுடன், தற்போதைய மோதல்களுக்கு இடையில் அமைதிக்கான புதிய அழைப்பாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இது அதிபர் டோனல்ட் ட்ரம்பின் காதுகளில் விழுமா என்பது தான் இங்குக் கேள்வியே…



