
கோலாலம்பூர்,ஏப்.3- போதைப் பொருள் ஆதிக்கத்தில் ஒரு நபர் ஏற்படுத்தும் சாலை விபத்துக்களுக்கு
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
போதைப் பொருள் உட்கொண்ட நிலையில் மரணம் விளைவிக்கும் சாலை விபத்துக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை வழங்கி விட்டால் இப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண முடியாது என்று ம.இ.கா ஊடக பிரிவு தலைவருமான சிவசுப்ரமணியம் தெரிவித்தார்ர.
போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக செக்ஷன் 302 இன் கீழ் மரணதண்டனை கொடுத்து விட்டால் இத்தகைய விபத்துக்கள் குறைந்து விடுமா? இதற்கு போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகள் அவசியம் என்று சிவசுப்ரமணியம் சொன்னார்.
நாடு தழுவிய நிலையில் போதைப் பொருள் உட்கொண்டு அல்லது மதுபோதையில் வாகனமோட்டி நிகழும் சாலை விபத்துக்கள் நிகழவே செய்கின்றன. இதற்கு மரணதண்டனையோ தூக்கு தண்டனையோ அல்லது வாழ்நாள் சிறைதண்டனை ஆகியவை ஒருபோதும் தீர் வாகாது என்று சிவசுப்ரமணியம் தெளிவுபடுத்தினார்.
அந்த ஒரு சாலை விபத்துக்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். ஈப்போ, பத்துகாஜாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் அம்மா, இரு மகள்கள் உயிரழந்த சம்பவத்திற்கு ஒரு லோரி ஓட்டுநர் போதைப் பொருள் உட்கொண்டு லோரியை ஓட்டியதுதான் காரணம் என்பதால் போதைப் பொருளை முற்றாக ஒழிக்க வேண்டும்.
அது போல அண்மையில் கிள்ளானில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலியானார். இதற்கு காரோட்டி போதைப் பொருள் உட்கொண்டதும் மது அருந்தியதும் முக்கிய காரணம். இதற்கு போதைப் பொருளை ஒழிக்கத்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் அந்த காரோட்டிக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் போதைப் பொருளை ஒழிக்க வகை செய்யுமா எனும் கேள்வி எழவே செய்கிறது என்று சிவசுப்ரமணியம் தெளிவுபடுத்தினார்.
ஆகையால், போதைப் பொருள் ஆதிக்கத்தில் நிகழும் சாலை விபத்துக்களுக்கு தீர்வு போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாட்டின் ஐஜிபி உத்தரவிட வேண்டும். போதைப் பொருள் ஆதிக்கத்தில் சாலை விபத்து மட்டுமன்றி எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்து வருவதை யாரும் மறுக்க முடியாது.
ஆகையால் அதிகாரத்தில் உள்ள காவல்துறை இதற்கு துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.



