
கோலாலம்பூர், ஏப்ரல்-12- வருபர்களிடம் பணத்தை வாங்கி, அதில் ஒரு பகுதியை இதற்கு முன்னால் முதலீடு செய்தவர்களுக்குக் கொடுக்கும் ஒரு “ஏமாற்று” திட்டமான போன்சி (Ponzi) தொடர்பில், 4 ‘டத்தோக்கள்’ உள்ளிட்ட 8 பேர் கைதாகியுள்ளனர்.
அந்நால்வரில் இருவர் வழக்கறிஞர்கள் ஆவர்.எல்லை கடந்த ஒத்துழைப்பின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட Op Northern Star சோதனையில் அவர்கள் கைதாகியதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
இக்கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மொத்தம் 3.17 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய பல்வேறு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 638 வங்கிக் கணக்குகளும் பங்குக் கணக்குகளும் அவற்றில் அடங்கும்.
தவிர, 2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துடைமைகள், 10 ஆடம்பரக் கார்கள், 12 சொகுசு கடிகாரங்கள், உள்ளூர் வெளியூர் மண நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு பெண் உள்ளிட்ட அந்த 8 பேரும், சட்டவிரோதப் பண பரிமாற்றம் நடவடிக்கை தொடர்பான விசாரணைக்காக, 1 நாள் முதல் 7 நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.