
சிரம்பான், செப்டம்பர் -29,
போர்ட்டிக்சன் கடற்கரைப் பகுதியில் சிப்பிகள் மற்றும் பிற சிப்பி வகைகள் உண்ணுவதற்கு பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சேகரிக்கப்பட்ட சிப்பி மாதிரிகளில், உயிர் நச்சுத்தன்மை அளவு 800 க்கு (parts per billion) குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சுங்கை ஸெகவாங் முதல் தஞ்சோங் தெலுக், பாசிர் பாஞ்சாங் (Sungai Sekawang to Tanjung Teluk) வரை கடல்பகுதியில் கம்பம் மற்றும் கூண்டு முறையில் சிப்பி வளர்ப்பில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், உடனடியாக மீண்டும் சிப்பிகள் மற்றும் பிற சிப்பி வகைகளை சேகரிக்கவும் அறுவடை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று நெகிரி செம்பிலான் மீன்வளத்துறை இயக்குநர் காசிம் தவீ தெரிவித்தார்.
கடந்த நான்கு வாரங்களாக தொடர்ச்சியான கண்காணிப்பில், அனைத்து மாதிரிகளின் நச்சுத்தன்மை அளவு 800 பிபிபிக்கு கீழாகவே இருந்து வந்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, போர்ட் டிக்சன் கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட சிப்பிகளில் நச்சுத்தன்மை அளவு 800 வரம்பை மீறியதால், அங்குள்ள சிப்பிகளைச் சேகரிக்கும் மற்றும் அறுவடை செய்வதற்கு மீன்வளத்துறை தடை விதித்திருந்தது.
அந்நேரத்தில், அப்பகுதி சிப்பிகளை மக்கள் உண்ணக் கூடாது என்றும், உணவுப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தடை காலத்தில் சேகரிக்கப்பட்ட சிப்பிகளை இன்னும் வைத்திருக்கும் பொதுமக்கள், அவற்றை உணவில் பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.