
கிள்ளான், பிப் 17 – வாகன உரிமையாளர்கள் சீட் பெல்ட் (seat belt) அலாரங்களை அமைதிப்படுத்த பயன்படுத்துவதைத் தடுக்க, போலி சீட் பெல்ட் கொக்கிகளை தடை செய்ய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சுடன் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சீட் பெல்ட் சென்சார்கள் அல்லது அலாரத்தை ஏமாற்றுவதற்காக இவ்வாறு செய்வது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானது என்று அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
வாகன உரிமையாளர்கள் சீட் பெல்ட் அணிவதற்குப் பதிலாக இந்த சாதனத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், அந்த பொருட்களை பறிமுதல் செய்யவோ அல்லது தடைசெய்யவோ போக்குவரத்து அமைச்சிற்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறினார்.
எனவே, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சுடன் இந்த பொருளை சந்தையில் அணுகுவதைத் தடைசெய்ய நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என செய்தியாளர் கூட்டத்தில் அந்தோனி தெரிவித்தார்.
இந்த போலி கொக்கிகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கு குறித்து கடந்த வாரம் நெகிரி செம்பிலான் சாலை போக்குவரத்துத்துறை கவலை தெரிவித்தது.
நெகிரி செம்பிலானில் சீனப் புத்தாண்டு போக்குவரத்து நடவடிக்கையின் போது சீட் பெல்ட்டைப் பயன்படுத்தத் தவறியதற்காக பிடிபட்ட 195 வாகன உரிமையாளர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் சீட்பெல்ட் அலாரத்தைத் தூண்டுவதைத் தவிர்க்க போலி கொக்கிகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.