
கோலாலாம்பூர், செப்டம்பர்-9 – ம.இ.கா திடீரென நஜிப்-பை சந்தித்தன் நோக்கம் என்ன?
நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ம.இ.கா தலைவர்கள் முன்னாள் பிரதமரும் முன்னாள் தேசிய முன்னனியின் தலைவருமாகிய டத்தோ ஶ்ரீ நஜிப்-பை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தையும் யூகங்களையும் கிளப்பியுள்ளது.
ம.இ.கா தேசியத்தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணன், உதவித்தலைவர் டத்தோ அசோஜன், பொதுச்செயலாளர் டத்தோ ஆனந்தன் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் அங்கு என்ன பேசப்படிருக்கும் என்பதே பலரின் கேள்வியாகவும் யூகங்களாகவும் உள்ளன.
தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவராகிய டத்தோ ஶ்ரீ சயிட் ஹமிடி மீது ம.இ.கா தலைமைத்துவம் அதிருப்தி கொண்டுள்ளது அண்மைய நிலவரங்கள் வழி வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில் அந்த அதிருப்தியை நஜிப்-பிடம் வெளிப்படுத்துவதற்காக சந்திப்பு நடந்ததா?
கட்சி பெரிக்காத்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருந்த நிலையில் அக்கூட்டணி தலைவர்களின் தகவல் ஏதும் நஜிப்-பிடன் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது கூட்டணி மாறுவது பற்றி நஜிப்-பின் ஆலோசனை ஏதும் பெறப்பட்டதா? என பல அரசியல் பார்வையாளர்கள் பலரும் தங்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
ம.இ.கா தலைவர்கள் யாரும் இதுவரை இதுபற்றி கருத்து ஏதும் தெரிவிக்காவிட்டாலும் இந்திய சமூகத்தின் பெரும் ஆதரவை பெற்ற நஜிப்புடன் நடந்த இந்த சந்திப்பு நிச்சயம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.