
கோலாலம்பூர், ஏப் 23 –
ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் நாடு தழுவிய நிலையில் உயர்க் கல்வி லட்சிய பயணம் 2025 என்ற தலைப்பில் வழிக்காட்டிக் கருத்தரங்கு இம்மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பேரா, கெடா, பினாங்கு ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
நாடு முழுவதும் SPM படிப்பை முடித்த மாணவர்களை இலக்காகக் கொண்டு , அவர்களுக்கு SPM- தேர்வு முடிவுக்குப் பிந்தைய கல்வி மற்றும் தொழில்துறைக்கான கல்வி குறித்த முக்கிய தகவல்களை இந்த கருத்தரங்கம் வழங்குகிறது.
இந்த முயற்சி நமது இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
UPU, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், மற்றும் மெட்ரிகுலேசன் கல்வி திட்டங்களில் இணைவதற்கான வழிகாட்டுதல் , பொது பல்கலைக்கழகங்கள் , தொழிற்நுட்ப கல்லுரிகள், ILP,ADTEC,சமூக கல்லூரிகள் , IKBN போன்றவற்றின் கல்வி திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் , கல்வி உபகாரச் சம்பள வாய்ப்புகள் மற்றும் மாணவர்களுக்கான ஆலோசனை சேவைகளும் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மலேசியா முழுவதிலுமிருந்து வரும் முக்கிய கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள் , வழிகாட்டிகள் மட்டுமின்றி SPM கல்வி முடித்த மாணவர்கள் தங்களது அடுத்த படிகள் குறித்து தகவல் அறிந்த முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் இதன்வழி பெறமுடியும்.
எனவே இந்த கருத்தரங்கில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொள்வதற்குஅழைக்கப்படுகின்றனர் என ம.இகா தேசிய இளைஞர் பிரிவின் உயர்கல்வி செயலக தலைவர்
சதிஸ்குமார் லெட்சுமணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேல்விவரங்களுக்கு திரையில் காணும் எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.
சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் காலை 9 மணிக்கு நேதாஜி மண்டபத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பங்கேற்கலாம்.
நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூரில் காலை 9 மணிக்கு இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலாக்காவில் PEJABAT JAPERUN GADEK, ஜோகூர் பாருவில் TAMPOI INDAHவிலுள்ள ம.இ.கா அலுவலகத்திலும் நெகிரி செம்பிலானில் மாநில ம.இ.கா அலுவலகத்திலும் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது