Latestமலேசியா

மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இன அடிப்படையிலான பாகுபாட்டை நான் காட்டுவதில்லை – அன்வார்

சுபாங் ஜெயா, டிசம்பர் 21, மக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுவதாக தம்மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டாம் என கூறியுள்ளார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்தியர்களுக்கென 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது நியாயமில்லை என கூறுவதை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.

இப்படி கூறி இன அடிப்படையிலான பாகுபாடு காட்டுவதாக என் மீது குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியர்களின் வருமானம் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளதை யாரேனும் அறிவீர்களா?

இது மலாய்க்காரர்களைக் காட்டிலும் அதிகம். அப்படியென்றால் மலாய்க்காரர்கள் என்னிடம் கேட்கலாம் அல்லவா, அன்வாரின் மடானி அரசாங்கம் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று. எனவே நம்புங்கள், எங்களால் முடிந்தவரை இந்தியர்களுக்கு சிறந்ததைதான் செய்து வருகிறோம் என கூறியிருக்கின்றார் அன்வார்.

Tvet கல்வி வாய்ப்பின் வாயிலாக, முதல் முறையாக இந்தியர்களுக்கென சிறப்பு சலுகையை நாம் வழங்கியுள்ளோம். இது குறித்து யாரும் பேசவில்லையே. ஆனால் அனைவரும் அந்த 130 மில்லியன் ரிங்கிட் குறித்து பேசி வருகிறீர்கள்.

நான் பல இடங்களுக்குச் செல்லும்போது, பிற மதத்தினரும்தான் என்னிடம் சொல்கிறார்கள், எங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று. கேட்பது உங்களின் நியாயம்.

அதை நான் மறுக்கவில்லை. ஆனால், ஒட்டு மொத்தமாகவே, மடானி அரசாங்கம் மாற்றாந்தாய் போல நடப்பதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களிடம் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் முக்கியமான ஒரு கூற்று என்னவென்றால் மலாய்க்காரர்களின் நிலை ஆபத்தில் இருக்கிறது என்பதே. அதன் பின்னர் இந்தியர்களிடம் சென்று இந்தியர்களின் நிலை ஆபத்தில் இருப்பதாகவும் , சீனர்களை சந்திக்கும் போது அவர்களின் நிலைக் குறித்து வருந்துவதுமாகவும் பேசி வருகிறார்கள்.

இது சரியல்ல என இன்று செய்தியாளர்களுடனான ஊடகச் சந்திப்பின் போது அன்வார் இவ்வாறு பேசினார்.

மித்ரா, அமானா இக்தியார் மற்றும் இன்னும் பல திட்டங்கள் வாயிலாக இந்தியர்களின் நலனை மடானி அரசாங்கம் காத்துதான் வருகிறது என தெரிவித்தார் அன்வார்.

எனவே இன அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுவதாக சொல்வதை விட்டுவிட்டு ஏழ்மை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்ற பிரச்சனைகளைக் களைய நாம் இணைந்து செயல்படுவோம்.

இப்போது எங்களை கேள்வி கேட்கும் ஒரு சில இந்திய அரசியல்வாதிகள், முன்பு ஆட்சியிலும் பதவியிலும் இருந்தபோது, தனக்கான வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலே ஆர்வம் காட்டினர். ஆனால் இப்போது மடானி அரசாங்கத்தை குறை கூறி வருகின்றனர் என அன்வார் காட்டமாக கூறினார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!