Latest

மதுக் கட்டுப்பாட்டில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் பின்பற்றுங்கள்; மடானி அரசுக்கு ‘உரிமை’ இயக்கம் கோரிக்கை

கோலாலம்பூர், மே-16,

மலிவு விலை மதுபானக் கலாச்சாரத்திலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க, மது விற்பனைக் கட்டுப்பாட்டில் தமிழக அரசை மடானி அரசாங்கம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

​மலேசிய மலிவு விலை மதுபான எதிர்ப்பு இயக்கத்தின் ஆர்வலரும், ‘உரிமை’ (URIMAI) இயக்கத்தின் இடைக்காலத் துணைத் தலைவருமான டேவிட் மார்ஷல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அதிரடி நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.

​சுமார் 85 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் வெறும் நான்காயிரத்திற்கும் குறைவான மதுக்கடைகளே உள்ள வேளையில், வெறும் 35 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மலேசியாவில் 5,791 சில்லறை மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் மட்டும் 1,721 உரிமங்கள் உள்ளன.

​மது அருந்துவது முஸ்லீம் அல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமை என்ற போதிலும், மலிவு விலை மதுபானங்கள் பள்ளி மாணவர்களுக்கும் 21 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கும் மிக எளிதாகக் கிடைப்பதே இன்றைய பெரும் சமூகச் சீரழிவுக்குக் காரணம் என அவர் சாடினார்.

​எனவே, சில்லறை மதுபான உரிமங்களை 70 விழுக்காடு வரை குறைத்து, மளிகைக் கடைகளில் மது விற்பதைத் தடை செய்து, பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள பிரத்யேகக் கடைகளில் மட்டுமே மது விற்க புதிய விதிகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என, டேவிட் மார்ஷல் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!